வளர்ச்சி என்றால் என்ன?
இணையதால் இணைந்த அனைவருக்கும் வணக்கம். இந்த பதிவில் வளர்ச்சி என்றால் என்ன என்கிறது பற்றி என்னுடைய சில கருத்துக்களை பகிர ஆசைப்படுகிறேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இது யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல.
வளர்ச்சி என்று சொன்னாலே நமக்கு ஞாபகம் வருவது மனிதனுடைய வளர்ச்சி மட்டும் தான். அதாவது இந்த பூமியில் மனிதன் மட்டும் தான் வாழ்வதாக நிறைய பேர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பூமியில் இருக்கிற பிற உயிரினங்களும் இயற்கையும் எதற்காக இருக்கிறது என்று தெரிவதில்லை. அதனால் மற்ற உயிரினங்களையும் இயற்கையையும் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றது மாதிரி உபயோகப்படுத்தலாம் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் என்ன செய்கிறோம் என்றால் நன்றாக இருக்கிற இயற்கை வளங்களை அழித்து உபயோகப்படுத்திவிட்டு, அழித்த இயற்கையை காப்பாற்ற வேண்டும் என்று போராடுகிறோம். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.
நம்முடைய தேவைக்கு அதாவது அடிப்படை தேவைக்கு இயற்கை வளங்களை உபயோகப்படுத்துவதில் தவறு இல்லை. ஆனால் நம்முடைய பேராசைக்கும் பண வெறிக்கும் இயற்கை வளங்களை அழிப்பது தான் தவறு. ஒரு பொருளை அழிப்பது எளிமையான காரியம். ஆனால அதே பொருளை உருவாக்குவது மிக கடினம்.
இதை எல்லாம் எதற்காக இங்கே பதிவிடுகிறேன் என்றால், இயற்கை வளங்களை அழிப்பது நம் நாட்டில் எல்லா பகுதிகளிலும் நடந்து கொண்டு வருகிறது. சில இடங்களில் யாருக்கும் தெரியாமல் மெதுவாக நடந்து கொண்டு இருக்கிறது. வேறு சில இடங்களில் வேகமாக நடக்கிறது.
உதாரணத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைகளை மனிதர்களுடைய தேவைக்காக அழித்து கொண்டு இருக்கிறார்கள். இது பல வருடங்களாக நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இப்பொழுது தான் இது நிறைய பேருக்கு தெரிய வந்து இருக்கிறது. தெரிய வந்தாலும் பெரிய பயன் இல்லை. ஏன் என்றால் மனிதர்களுடைய அடிப்படை தேவைகளில் ஒன்று வீடு. அந்த வீடு கட்டுவதற்கு கல் மிக முக்கியமானது. அந்த கல் இந்த மாதிரி மலைகளில் இருந்தும் பாறைகளில் இருந்தும் தான் எடுக்க முடியும். ஆனால் இதனுடைய விளைவுகள் என்ன என்பது நமக்கு தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் நாம் பெரிதாக கண்டு கொள்வது இல்லை.
ஏன் என்றால் நம்முடைய தேவை, கண்ணை மறைக்கிறது. இதனுடைய விளைவு கடைசியில் குடிக்க தண்ணீர் இல்லாத நிலைமை கூட ஏற்படலாம். ஏன் என்றால் மலைகள் மழையின் முக்கிய ஆதாரம். எனவே மலைகளை நாம் அறுத்து எடுத்தால் இயற்கை மழை பொழியாமல் நம்மை பழி வாங்கும்.
இந்த மாதிரி இயற்கையை அழிப்பதனால் ஏற்படுற அழிவுகள் பலவற்றை நாம் பார்த்து இருக்கிறோம். அதனால் முடிந்தவரை இயற்கையை அழிக்காமல் மாற்று வழியில் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும்.
இந்த மனித குலத்தோட வளர்ச்சி, இயற்கையை அழித்து கட்டியதாக இருக்க கூடாது. இயற்கையை வாழ வைத்து நாமும் வாழ்ந்ததாக இருக்க வேண்டும். அதனால் வளர்ச்சி என்கிற பெயரில் வளங்களை அழிக்காமல், நாமும் வாழ்ந்து இயற்கையையும் வாழ வைக்க வேண்டும் என்று கூறி இந்த பதிவை நிறைவுக்கு கொண்டு வருகிறேன். நன்றி
No comments:
Post a Comment